வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி போலி விசா கொடுத்து பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி
வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி போலி விசா கொடுத்து பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி போலி விசா கொடுத்து பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நார்வே நாட்டில் வேலை
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தாரணி (வயது 27). இவர் கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நான் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து முடித்து உள்ளேன். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு எனது முகநூல் பக்கத்தை பார்த்து கொண்டிருந்தேன். அப்போது கோவையை சேர்ந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் நார்வே நாட்டில் வேலை இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது மறுமுனையில் பேசிய நபர் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முருகன் (45) பேசுவதாகவும், வேலை தொடர்பாக கோவை சித்தாபுதூரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து பேசும்படியும் தெரிவித்தார்.
ரூ.5 லட்சம் மோசடி
இதையடுத்து நானும், எனது கணவரும் சித்தாபுதூரில் உள்ள அந்த அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு இருந்த முருகன், எங்களிடம் நார்வே செல்ல விசா மற்றும் விமான கட்டணம் ஆகியவற்றிற்கு ரூ.6 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய நாங்கள் உடனடியாக அவரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கினோம்.
அதன்பின்னர் அவரின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக ரூ.5 லட்சம் கொடுத்தேன். இதன்பின்னர் அவரிடம் நார்வே நாட்டிற்கு செல்ல எப்போது விசா கிடைக்கும் என்று கேட்டு வந்தேன். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் எனக்கு நார்வே செல்வதற்காக விசா கொடுத்தார். மேலும் விமான டிக்கெட் பின்னர் தரப்படும் என்று தெரிவித்தார்.
இதனிடையே அவர் மீது எனக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அந்த விசாவை சரிபார்த்தேன். அப்போது அது போலி விசா என்பது தெரியவந்தது. எனவே என்னிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் மோசடி செய்த முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நிர்வாக இயக்குனர் மீது வழக்கு
இந்த புகாரின் பேரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் முருகன் மீது காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர் வேறு யாரிடமாவது இதேபோல வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து உள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.