பெண் என்ஜினீயரிடம் ரூ.5½ லட்சம் மோசடி
பெண் என்ஜினீயரிடம் ரூ.5½ லட்சம் மோசடி
கோவை
ஆன்லைன் மூலம் பெண் என்ஜினீயரிடம் ரூ.5½ லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
பெண் என்ஜினீயர்
கோவை கணபதி வரதராஜூலு நகர் பகுதியை சேர்ந்தவர் புவனேசுவரி (வயது26). பெண் என்ஜினீயர். இவர் வேலை தேடி வந்தார். இந்தநிலையில் இவரது வாட்ஸ்-அப்புக்கு ஒரு தகவல் வந்தது. பிரபல நிறுவனத்துக்கு நிர்வாக அதிகாரியாக நியமிப்பதாகவும், யூடியூப் மூலம் அதிக வாடிக்கையாளர்களை சேர்த்துவிட்டால் ஊக்கத்தொகை வழங்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கான கட்டண தொகையாக ரூ.1000-ம் அனுப்பும்படி அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அவர் ஆன்லைன் செயலிக்கு ரூ.1000 அனுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து சிலநாட்களில் ரூ.1,480 ஆக வந்தது.
இதனால் நம்பிக்கை ஏற்பட்ட புவனேசுவரி, தனது 2 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். அதன்பின்னர் எந்த ஊக்கத்தொகையும் அவர்கள் அனுப்பவில்லை.
வழக்குப்பதிவு
அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை புவனசுவரி உணர்ந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.