ஆசிரியை வேலை தருவதாக ரூ.6 லட்சம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
ஆசிரியை வேலை தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மோசடி
திருச்சி உய்யகொண்டான்திருமலை எம்.எம்.நகர் விஸ்தரிப்பை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 42). இவரது மனைவிக்கு பள்ளியில் ஆசிரியை பணி பெற்று தருவதாக கூறி கரூரை சேர்ந்த 2 பேர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியின் தாளாளரை செல்லதுரைக்கு அறிமுகம் செய்து வைத்தனர். இதற்காக அவர்கள் 2 பேரும் ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் செல்லதுரை அந்த பள்ளியின் தாளாளரிடம் ரூ.5 லட்சமும், தனது மனைவியின் அசல் கல்விச்சான்றிதழ்களை கொடுத்ததாகவும், அதன்பிறகு பல நாட்களாகியும் வேலை வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து பணம் மற்றும் சான்றிதழ்களை திருப்பி கேட்டபோது, தர மறுத்ததோடு, சாதிபெயரை சொல்லி திட்டியதாக கூறி செல்லதுரை கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பள்ளி தாளாளர் உள்பட 3 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து கிடந்த ரெயில்வே ஊழியர்
*லால்குடி ஒன்றியம் அப்பாதுரை ஊராட்சி மேளவாழை கிராமம் தெற்கு சத்திரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி நிவேதா(23). இவர் கல்லக்குடி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது தந்தை கதிர்வேல்(48) தென்னக ரெயில்வேயில் பாண்ட்மேனாக புள்ளம்பாடி பகுதியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவர் புள்ளம்பாடி ரெயில்வே பழைய கட்டிடத்தில் உள்ள நடைமேடையில் உள்ள இருக்கையில் இறந்து கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் கொத்தனார் சாவு
*முசிறியில் இயங்கி வரும் மது விலக்கு அமலாக்க பணியகத்தின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தனது குழுவினருடன் தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் மது விற்ற பூலாஞ்சேரி கிராமத்தில் பெரியசாமி (54), காட்டுப்புத்தூர் அருகே கல்லூர்பட்டி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே மது விற்ற கோவிந்தம்மாள் (55) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
*தொட்டியம் அருகே மேலசீனிவாசநல்லூரை சேர்ந்த சண்முகத்தின் மகன் துரைசாமி(வயது 35). கொத்தனாரான இவர் ஆற்றுப்பாதையில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திருச்சி-சேலம் புறவழி சாலையை மேலசீனிவாச நல்லூர் அருகே கடக்க முயன்றபோது, சேலம் நோக்கி வந்த கார் மோதியதில் துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தொட்டியம் போலீசார், காரை ஓட்டி வந்த அருள் (45) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோழி இறைச்சிக்கடையில் தீ
*திருச்சி பாலக்கரை எடத்தெரு கிருஷ்ணன் கோவில் அருகில் கோழி இறைச்சிக்கடை உள்ளது. நேற்று காலை அந்த கடையின் கியாஸ் அடுப்பை பற்ற வைத்தபோது, திடீரென்று கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடை முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்த திருச்சி தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவிலில் திருட முயன்றவர் கைது
*துறையூர் குட்டக்கரை தெருவில் வசித்து வருபவர் செல்வம்(வயது 46). இவர் துறையூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று பக்தர் போல் ஒருவர் கோவிலுக்கு வந்தார். அவர் தனக்கு வாயில் புண் இருப்பதாகவும், அதற்கு அம்மன் திருநீரு வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதையடுத்து பூசாரி கருவறைக்குள் சென்று திருநீரு எடுத்து வெளியே வந்தபோது, அந்த நபர் உண்டியலில் இருந்த பணத்தை திருட முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை பொதுமக்கள் பிடித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
வைக்கோலை வாயில் வைத்து போராட்டம்
*திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 38-ம் நாளான நேற்று காவிரியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு மாதாமாதம் தர வேண்டிய தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும். சம்பா மற்றும் குறுவைப் பயிர்களை காப்பாற்ற வேண்டும். இல்லை என்றால் சாப்பாட்டுக்கு பதிலாக வைக்கோலை தான் சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று விவசாயிகள் வைக்கோலை வாயில் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூதாடிய 4 பேர் கைது
*திருவெறும்பூர் அருகே கீழகல்கண்டார் கோட்டை பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின்பேரில் திருவெறும்பூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அழகு நாச்சியார் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய வடக்கு காட்டூர் பாத்திமா புரம் 2-வது தெருவை சேர்ந்த சேவியர்(54), கீழக்குறிச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முனியாண்டி(57), அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(51), வடக்கு காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அன்பழகன்(34) ஆகியோரை போலீசார் கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர்.