போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.9½ லட்சம் மோசடி


போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.9½ லட்சம் மோசடி
x

போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ.9½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

வெளிநாட்டில் வேலை

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு பகுதியில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஒரு தனியார் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இந்த ஏஜென்சியின் உரிமையாளர் மீனாட்சி மற்றும் மேலாளர் ஆகியோர், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி சிவகங்கை மாவட்டம், கட்டாணிப்பட்டி பெரியகோட்டைப்பட்டி பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 39) என்பவர் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் இவரது உறவினர்களான ஆதித்யன் ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், அகஸ்டின் ஜெயகுமார் ரூ.3 லட்சத்து 87 ஆயிரமும், முத்துராமலிங்கம் ரூ.1 லட்சத்து 55 ஆயிரமும் என மொத்தம் ரூ.9 லட்சத்து 62 ஆயிரத்தை அந்த தனியார் ஏஜென்சியிடம் கொடுத்தனர்.

போலி பணி நியமன ஆணை

அவர்கள் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, போலந்து நாட்டில் வேலை என்று கூறி, போலி பணி நியமன ஆணை தயாரித்து பார்த்தசாரதி உள்பட 4 பேரிடம் கொடுத்தனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் போலந்து நாட்டில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. இது தொடர்பாக அந்த தனியார் ஏஜென்சியிடம் கேட்டபோது எந்த பதிலும் இல்லை. இதனால் 4 பேருக்கும் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில் மீனாட்சி, பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story