பெண் உள்பட 2 பேரிடம் ரூ.23½ லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.23½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி பெண் உள்பட 2 பேரிடம் ரூ.23½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைனில் வேலைவாய்ப்பு
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கோதை (வயது 44). அவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த மாதம் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு கொடுப்பதாகவும், இதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் அதில் இருந்த லிங்கை கோதை பதிவிறக்கம் செய்து கொண்டார். இதில் ஒரு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தினால் வேலை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் கூறிய வங்கி கணக்கு எண்ணுக்கு பல தவணையாக ரூ.10 லட்சத்து 33 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அந்த எண்ணில் இருந்து வேலைவாய்ப்பு தொடர்பாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோதை இது தொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை
சேலம் மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடேசன் (36). இவருடைய வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு கொடுப்பதாக கூறப்பட்டிருந்தது. இதை நம்பி அதில் இருந்த லிங்கை அவர் பதிவிறக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து அதில் கூறப்பட்டிருந்த வங்கி எண்ணிற்கு பல தவணையாக ரூ.13 லட்சத்து 23 ஆயிரம் செலுத்தினார்.
ஆனால் அதன் பிறகு அவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வேலைவாய்ப்பு தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை. இதுகுறித்து நடேசன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த 2 புகார்களின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.