குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி
குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மனு
வேர்க்கிளம்பி சந்திப்பில் இயங்கி வரும் நிதி நிறுவனத்தில் கடன் பெறுவதற்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் சார்பில் விளவங்கோடு கோணத்துவிளை வீடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் வேர்க்கிளம்பி சந்திப்பில் இயங்கி வரும் ஒரு நிதி நிறுவனத்தில் கிளை பொறுப்பாளராக உள்ளேன். எங்கள் நிறுவனத்தில் 20 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். எங்களை, இந்த நிறுவனத்தில் தலைமை பொறுப்பாளராக இருக்கும் 4 பேர் சேர்ந்து பணி நியமனம் செய்தார்கள். நாங்கள் பணிக்கு சேர்ந்து 45 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் நிதி நிறுவனம் மூலமாக தனி நபர்கள் மற்றும் சுய உதவிக்குழு பெண்களிடம் கடன் உதவி வழங்க முடிவு எடுத்து இருப்பதாக நிறுவன பொறுப்பாளர்கள் எங்களிடம் கூறினர்.
ஆவணங்கள்
அதன்பேரில் தகுதி வாய்ந்த நபர்களிடம் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பேங்க் பாஸ்புக், ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சொந்த வீட்டு வரி ரசீது ஆகியவற்றை ஆவணங்களாக பெற்றுக்கொண்டு ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற விரும்புபவர்களிடம் ரூ.5 ஆயிரத்தை வங்கி வரைவு காசோலையாக எடுக்கவும், இல்லை எனில் நேரடியாக பணம் வாங்கவும் எங்களிடம் கூறினார்கள்.
அதன்பேரில் தனிநபர் கடன் பெற 228 வரைவு காசோலைகள் மற்றும் பணமாகவும் பெற்றோம். மேலும் பெண்கள் சுய உதவிக்குழு கடன்பெற 68 குழுக்களுக்கும் உரிய தொகையை நிதி நிறுவனத்தின் தலைமை விசாரணை மேலாளரிடம் வழங்கினோம். நாங்கள் பணம் வசூலித்து கொடுத்த அனைத்து நபர்களுக்கும் கடன் வழங்குவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர்கள் 4 பேரையும் நாங்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்களது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
ரூ.3 கோடி மோசடி
நாங்கள் பணி செய்யும் நிறுவனம் கூறியது போல எங்கள் பகுதி மக்கள் எங்களை நம்பி கடன் பெறுவதற்காக பணம் தந்தார்கள். அந்த வகையில் சுமார் 3 கோடி ரூபாயை தலைமை நிர்வாகத்தை நம்பி ஒப்படைத்தோம். ஆனால் நிதி நிறுவன தலைமை பொறுப்பாளர்கள் 4 பேரும் அந்த பணத்தை பெற்றுக் கொண்டு கடன் தராமல் மோசடி செய்து விட்டார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.