எலெக்டிரிக்கல் பொருட்கள் வாங்கி ரூ.76 ஆயிரம் மோசடி
கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக கூறி எலெக்டிரிக்கல் பொருட்கள் வாங்கி ரூ.76 ஆயிரம் மோசடி செய்த காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக கூறி எலெக்டிரிக்கல் பொருட்கள் வாங்கி ரூ.76 ஆயிரம் மோசடி செய்த காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கூகுள் பே மோசடி
கோவை ராம்நகர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் நிகில் ஜெயின் (வயது29). இவர் அதே பகுதியில் எலெக்டிரிக்கல் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று, அவர் கடையில் இருந்த போது எலெக்டிரிக்கல் பொருட்கள் வாங்க ஒருவர் வந்தார். அவர், ரூ.1 லட்சத்து ஆயிரத்து 196-க்கு எலெக்டிரிக்கல் பொருட்கள் வாங்கினார்.
அதற்குரிய பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பி விட்டதாக கூறி, அதற்குரிய மெசேஜை காட்டி விட்டு சென்றார். அதே நபர் மறுநாள் நிகில் ஜெயின் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தார்.
அப்போது அவரிடம், நீங்கள் அனுப்பிய தொகை எனது வங்கி கணக்கில் வரவில்லை என நிகில்ஜெயின் தெரிவித்தார்.
ரூ.20 ஆயிரம் கொடுத்தார்
அதற்கு அவர் சர்வர் பிரச்சினை காரணமாக பணம் வராமல் இருக்கலாம் என்று கூறி விட்டு ரூ.20 ஆயிரத்தை ரொக்கப் பணமாக கொடுத்து உள்ளார். மேலும் அவர் கூகுள் பேயில் அனுப்பிய பணம் வந்து விடும். இல்லை என்றால் எனது செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றார்.
ஆனால் அவர் முதலில் அனுப்பியதாக கூறிய ரூ.1 லட்சத்து ஆயிரத்து 196-ம் நிகில்ஜெயினின் வங்கி கணக்கிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிகில் ஜெயின் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார்.
உடனே அந்த நபர் ரூ.5 ஆயிரம் அனுப்பினார். அவர் ரூ.25 ஆயிரம் மட்டும் கொடுத்த நிலையில், மீதி ரூ.76,196-ஐ கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்தார்.
காய்கறி கடைக்காரர் கைது
இதனால் நிகில்ஜெயின் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து நிகில் ஜெயின் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கோவை உக்கடத்தை சேர்ந்த காய்கறி கடை உரிமை யாளர் ஷேக்அப்துல் காதர் (50) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.