ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மோசடி


ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 23 Jun 2023 12:45 AM IST (Updated: 23 Jun 2023 4:39 PM IST)
t-max-icont-min-icon

போடியில், வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

ரூ.8 லட்சத்து 40 ஆயிரம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோகிலாபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், எனது நண்பர் ஒருவர் மூலமாக போடியை சேர்ந்த கனகராஜ் மகன் சக்திகுமார் அறிமுகம் ஆனார். அவர் தனது அண்ணன் சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்து வருவதாகவும், அவர் மூலம் வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். அதை நம்பி அவரிடம் நான் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்தேன். ஆனால், அவர் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றினார். இதனால், எனது குடும்பத்தினருடன் போடிக்கு சென்று பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால் சக்திகுமார் பணத்தை திருப்பி தரவில்லை. அப்போது அவரும், அவருடைய குடும்பத்தினரும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தகாத வார்த்தையாலும் பேசினர், என்று கூறியிருந்தார்.

4 பேர் மீது வழக்கு

இந்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போடி நகர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையை தொடர்ந்து, சக்திகுமார், அவருடைய தந்தை கனகராஜ், தாய் பேச்சியம்மாள், தம்பி பாலாஜி ஆகிய 4 பேர் மீதும் போடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story