1,326 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
பொன்னை மற்றும் காட்பாடியில் நடந்த விழாவில் 1,326 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
விலையில்லா சைக்கிள்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொன்னை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளிமலை அரசு மேல்நிலைப்பள்ளி, விண்ணம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 4 பள்ளிகளை சேர்ந்த 374 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன் நிலுவையில் உள்ள அனைத்து சைக்கிள்களையும் மாணவ- மாணவிகளுக்கு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மாணவ- மாணவிகள் அனைவரும் சைக்கிளில் பயணம் செய்யுங்கள். அதனால் உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.
பொன்னை மேம்பாலம்
பின்னர் பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை விரைவில் கட்டி முடிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதியால் தரைப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கப்போகிறார். சின்ன பாலத்திற்கு அப்பா வந்தார். பெரிய பாலத்திற்கு பிள்ளை வரவேண்டும். எப்படியும் முதல்-அமைச்சரை அழைத்து வருவேன் என்றார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பொன்னை ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
காட்பாடி
இதேபோன்று காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் தாங்கி பேசினார். எம்.எல்.ஏ. க்கள் ஏ.பி.நந்தகுமார், அமலுவிஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 84 பள்ளிகளை சேர்ந்த 9,853 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக 8 அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளை சேர்ந்த 952 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கி பேசினார்.
விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, மண்டலகுழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர் கே.அன்பு, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிஸ்வர பிள்ளை, தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.