பரமக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல், எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், துணை தலைவர் வேலுச்சாமி, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து வரவேற்றார்.
விழாவில் 2358 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் விலையில்லா சைக்கிள்கள் வழங்கி பேசுகையில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். அதன் மூலமாக இந்த மாவட்ட மக்கள் குடிநீர் தட்டுப்பாடு இன்றி உள்ளனர். தற்போது மக்கள் தொகை அதிகரித்து வருவதால் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் காவிரி தண்ணீர் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மக்கள் பணி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பணியாற்றி வருகிறோம். குறை கூறுபவர்களை பற்றி கவலைப்படுவதில்லை. எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், பள்ளி தாளாளர் சாகுல் ஹமீது, தலைமை ஆசிரியர் ராஜமால்கான், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, கதிரவன், குணசேகரன், அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, பூமிநாதன், நகர் மன்ற துணை தலைவர் குணசேகரன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஜீவரத்தினம், ஜெயபாரதி, அப்துல் மாலிக், சதீஷ்குமார், பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.