மத்திய அரசு பணி, ரெயில்வே, வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி
நெல்லையில் மத்திய அரசு பணி, ரெயில்வே, வங்கி பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
நெல்லையில் மத்திய அரசு பணி, ரெயில்வே, வங்கி பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
பயிற்சி வகுப்பு தொடக்கம்
மத்திய அரசு பணிகள், ரெயில்வே மற்றும் வங்கி பணிகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் சேரும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாவட்ட தலைநகரங்களில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. நெல்லை மாவட்ட தனி வருவாய் அலுவலர் (நதிநீர் இணைப்பு திட்டம்) சுகன்யா குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி, மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், முதல் நிலை நூலகர் வைலட், நூலக ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
300 மாணவர்கள்
இந்த திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். இதையொட்டி பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகம் மற்றும் காந்தி நகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி ஆகிய 2 மையங்களில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. ஒரு மையத்துக்கு 150 பேர் வீதம் மொத்தம் 300 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி 100 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கப்படுகிறது. அப்போது 120 பயிற்சி தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு பாட நூல்கள் மற்றும் கையேடுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகம்
இதுதவிர மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.