52 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா


52 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா
x

விளிம்பு நிலையில் இருந்த 52 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை கலெக்டர் கற்பகம் வழங்கினார்.

பெரம்பலூர்

மாற்று இடம் தேர்வு செய்து...

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுவயலூர் கிராமத்தில் பெருமாள்பாளையம், ஊத்தங்கால் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விளிம்பு நிலையில் இருக்கும் 52 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்த நிலையில், சிறுவயலூரை சேர்ந்த மக்கள் அப்பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆட்சேபனை தெரிவிப்பதாகவும், தங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும் பயனடைந்த பயனாளிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக கலெக்டர் கற்பகம் விரிவான விசாரணை நடத்த ஆலத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். விசாரணையில், சிறுவயலூரில் உள்ள இடுகாடு அமைந்துள்ள பகுதிக்கு அருகே இந்த இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் வீடுகள் வந்தால் இடுகாட்டை பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும் என்றும் சிறுவயலூர் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இருதரப்பு மக்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் அந்த பயனாளிகளுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து வழங்கிட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்.

கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

இந்நிலையில், இதுகுறித்து அந்த பயனாளிகள் தங்களுக்கு இன்னும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்று நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இவர்களுக்கு வழங்குவதற்காக மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளபோதும் இதுவரை வழங்காதது ஏன் என விசாரித்த கலெக்டர் கற்பகம் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஆலத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், சிறுவயலூரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட 52 பயனாளிகளுக்கும் இரூரில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று இடத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அந்த 52 பயனாளிகளுக்கும் கலெக்டர் கற்பகம் இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார். பட்டா பெற்று கொண்ட பயனாளிகள் கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மணிகண்டன், தாசில்தார்கள் முத்துக்குமார் (ஆலத்தூர்), கிருஷ்ணராஜ் (பெரம்பலூர்) ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story