கஞ்சா, குட்கா வழக்குகளில் தொடர்பு; 65 பேரின் வங்கி கணக்கு முடக்கம்
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் கஞ்சா போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பாக 139 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 50 பேர் மீது குட்கா விற்பனை தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 55 பேர் குட்கா வழக்குகளில் தொடர்புடைய 10 பேர் என 65 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பாக 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை முழுமையாக தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக தகவல்கள் கிடைத்தால் பொதுமக்கள், போலீசாருக்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.