அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தில் அடிக்கடி விரிசல்


அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தில் அடிக்கடி விரிசல்
x
தினத்தந்தி 26 Oct 2023 11:30 PM GMT (Updated: 26 Oct 2023 11:30 PM GMT)

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தில் அடிக்கடி விரிசல் ஏற்படுவதால் சினிமா பாணியில் சீரமைப்பு பணிகள் நடப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தேனி

அரசு சட்டக்கல்லூரி

தேனி அருகே வீரபாண்டியில் தப்புக்குண்டு சாலையில் அரசு சட்டக்கல்லூரி அமைந்துள்ளது. இங்கு ரூ.89 கோடியே 1 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த கட்டிடங்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

பிரமாண்டமான தோற்றத்தில் கட்டப்பட்டு இருந்தாலும் இந்த கட்டிடத்தின் சுவர்களில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கட்டிடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விரிசல் விழுந்த சுவர்களில் சிமெண்டு பூசும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக உயரமான கட்டிடத்தில் அந்தரத்தில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் தொழிலாளர்கள் பணியாற்றினர்.

அடிக்கடி விரிசல்

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' திரைப்படத்தில் மக்களுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் தரமற்ற நிலையில் இருப்பது போன்றும், அதில் அடிக்கடி சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதேபாணியில் இந்த கட்டிடத்திலும் சீரமைப்பு பணிகள் நடப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் கூறுகையில், 'இந்த கல்லூரி கட்டிடத்தில் அடிக்கடி விரிசல் விழுகிறது. 6 மாதங்களுக்கு முன்பு விரிசல் அதிக அளவில் காணப்பட்டதால் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு மீண்டும் விரிசல் விழுந்துள்ளது. தற்போது அதை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. அடிக்கடி விரிசல் விழும் கட்டிடத்தை பார்த்தால் பயமாக இருக்கிறது. இந்த கட்டிடத்தின் உறுதித்தன்மை மற்றும் கட்டுமான தரத்தை வல்லுனர்கள் குழுவை கொண்டு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சீரமைப்பு பணி நடப்பதை பார்க்கும் போது, 'மாவீரன்' திரைப்படக் காட்சிகள் தான் நினைவுக்கு வருகின்றன' என்றனர்.


Next Story