காவிரி தடுப்பணையில் இருந்து அடிக்கடி வெளியேறும் தண்ணீர்
பூம்புகார் அருகே காவிரி தடுப்பணையில் இருந்து அடிக்கடி தண்ணீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவெண்காடு:
பூம்புகார் அருகே காவிரி தடுப்பணையில் இருந்து அடிக்கடி தண்ணீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பணை
பூம்புகார் அருகே பழையகரம் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 5 ஆண்டுகளுக்கு முன்னர் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் நீர் தேங்கி நிற்பதால் வானகிரி, பழையகரம், ஏராம் பாளையம், மேலையூர், சாயாவனம் மற்றும் பல்லவணம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீரின் உப்பு தன்மை மாறியதால், மோட்டார் பம்பு, கைப்பம்பு ஆகியவற்றின் மூலம் கிடைக்கின்ற நீர் சுவையான நீராக மாறி இருக்கிறது.
மேலும் காவிரி ஆற்றில் நீர் தேங்குவதால் விவசாயிகளும் இரண்டு போக சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பழையகரம் தடுப்பணை, பெருந்தோட்டம் மற்றும் திருவாலி ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வருகிறது.
வெளியேறி கடலில் கலக்கிறது
இதனிடையே பழையகரம் தடுப்பணையில் இருந்து இரவு நேரங்களில் நீர் வெளியேறி கடலில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணையில் நீர் குறைந்து காணப்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளாக மேற்கண்ட தடுப்பணையில் நீர் தேங்குவதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. தடுப்பணையில் தேங்கி நிற்கின்ற நீரானது இரவு நேரங்களில் வெளியேறி வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.