ஓட்டலில் நண்பர்கள் மோதல்; என்ஜினீயர் அடித்துக் கொலை
நெய்வேலியில் ஓட்டலில் நண்பர்கள் மோதிக்கொண்டனர். இதில் என்ஜினீயர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்
நெய்வேலி
என்ஜினீயர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 56). இவர் என்.எல்.சி. முதலாவது சுரங்கத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராஜேந்திரன்(28). என்ஜினீயர். இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதிக்கு 4 மாத குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ராஜேந்திரன், தனது நண்பர்களான நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம்குமார், நெய்வேலி 21-வது வட்டத்தை சேர்ந்த ராதா மகன் செல்லப்பா, கீழக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன், கொம்பாடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உத்தண்டி ஆகியோருடன் நெய்வேலி 16-வது வட்டத்தில் உள்ள ஓட்டலில் நேற்று மதியம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
கட்டையால் அடித்துக் கொலை
அப்போது, நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. ஒருவரையொருவர் கையால் தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த செல்லப்பா, ஓட்டலில் இருந்த விறகு கட்டையை எடுத்து ராஜேந்திரனை சரமாாியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி போலீசார் விரைந்து வந்து ராஜேந்திரனின் உடலை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்காக என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜேந்திரனின் கொலைக்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, ராஜேந்திரனின் நண்பர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.