ஆனைமலையில் இருந்து நா.மூ.சுங்கம் வரை ரூ.5 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி
ஆனைமலையில் இருந்து நா.மூ.சுங்கம் வரை விபத்துகளை தடுக்க ரூ.5 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி
ஆனைமலையில் இருந்து நா.மூ.சுங்கம் வரை விபத்துகளை தடுக்க ரூ.5 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ரூ.5 கோடி நிதி
ஆனைமலையில் இருந்து உடுமலை செல்லும் ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் விபத்துகளை தடுக்க சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை அகலப்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பாசன கால்வாய் செல்லும் இடங்கள் மற்றும் மழைநீர் செல்லும் ஓடைகளின் குறுக்கே சிறு பாலங்கள் கட்டப்படுகின்றன. இதற்கிடையில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால் இரவு நேரங்களில் சாலை பணிகள் நடைபெறுவது தெரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலை பணிகள் நடக்கும் இடங்களில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சிறு பாலங்கள்
ஆனைமலையில் இருந்து நா.மூ.சுங்கம் மற்றும் நா.மூ.சுங்கத்தில் இருந்து உடுமலை ரோடு குறுகலாக உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதை தடுக்க தற்போது 5 மீட்டர் உள்ள சாலை 7 மீட்டருக்கு அகலப்படுத்தப்படுகின்றது. மேலும் பாசன கால்வாய் செல்லும் இடங்களில் பெரிய குழாய்கள் அமைத்து சிறு பாலம் கட்டப்படுகின்றது. மேலும் தண்ணீர் எளிதில் செல்லும் வகையில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பூவலப்பருத்தியில் பொள்ளாச்சி கால்வாயின் குறுக்கே கான்கிரீட் அமைத்து சிறு பாலம் கட்டப்படுகிறது. சாலை பணிகள் நடைபெறும் போது விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.