பவானிசாகர் அணையில் இருந்துகீழ்பவானி வாய்க்காலில் கூடுதலாக 17 நாட்கள் தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கூடுதலாக 17 நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கூடுதலாக 17 நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் கீழ்பவானி திட்ட ஒற்றை படை மதகு கால்வாய் மற்றும் இரட்டை படை மதகு கால்வாய் என இரு போகத்துக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த மொத்தம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதில் ஒரு போகத்துக்கு தலா ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
அதன்படி 2022- 2023-ம் ஆண்டின் முதல் போக நன்செய் பாசனத்துக்கு பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலம் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் கடந்த 9-ந் தேதி வரை 130 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்று (29-ந் தேதி) காலை 8 மணி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
கூடுதலாக 17 நாட்கள்
இந்த நிலையில் கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோாிக்கையை ஏற்று நேற்று காலை 8 மணி முதல் கீழ்பவானி வாய்க்காலில் வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி காலை 8 மணி வரை கூடுதலாக 17 நாட்கள் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அரசு உத்தரவின்படி நேற்று கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.22 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 863 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியும், ஆற்றில் வினாடிக்கு 900 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.