இயற்கை உரத்துக்காக வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் மாடுகள்


இயற்கை உரத்துக்காக வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் மாடுகள்
x

திருக்கருகாவூர் பகுதியில் விளை நிலங்களில் இயற்கை உரத்துக்காக வெளிமாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்படுகின்றன. ஒரு இரவு கிடை அமைக்க ரூ.2 ஆயிரம் பெறுகிறார்கள்.

தஞ்சாவூர்

மெலட்டூர்;

திருக்கருகாவூர் பகுதியில் விளை நிலங்களில் இயற்கை உரத்துக்காக வெளிமாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்படுகின்றன. ஒரு இரவு கிடை அமைக்க ரூ.2 ஆயிரம் பெறுகிறார்கள்.

இயற்ைக விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்துக்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இப்பகுதி விவசாயிகள் சமீபகாலமாக இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதற்கு முன்ஏற்பாடாக அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இயற்கை உரத்துக்கு கால்நடைகளின் கழிவுகளை சேகரித்து வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ரசாயன உரம்

சமீபகாலமாக கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிக அளவில் கிடைப்பதில்லை.அதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்தது. ரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு அதில் விளைவிக்ககூடிய தானியங்களை உண்ணும் மனிதன் பல்வேறு நோய்தொற்றால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.இதனால் இயற்கை உரமிட்டு விவசாயம் செய்ய சில விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விளைநிலங்களில் ஆடுகள், மாடுகளை அடைத்து வைத்து கிடை மூலம் கால்நடைகளின் கழிவுகள் விளை நிலங்களுக்கு சிறந்த இயற்கை உரமாக கிடைக்கிறது.

இயற்கை உரம்

இதனால் சேலம் மாவட்டம் ஆத்தூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் சேகரிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரும்புதலை, திருக்கருகாவூர், இடையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள விளை நிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு தரிசு விவசாய நிலங்களில் பகலில் மேய்ச்சலில் ஈடுபடுத்துகின்றனர். இரவு நேரங்களில் விளைநிலங்களில் அடைத்து வைத்து அதன் கழிவுகளை வைத்து இயற்கை உரமாக பயன்படுத்துகிறார்கள்.

சலுகைகள்

இதைப்போல ராமநாதபுரம் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும் இயற்கை உரத்திற்காக கொண்டு வரப்பட்டு ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.எனவே இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்தால் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவர். மேலும் மண்வளமும் பாதுகாக்கப்படும்.

ரூ.2 ஆயிரம்

இதுகுறித்து மாடுமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள ஆத்தூர் பகுதி தொழிலாளர் கூறியதாவது:-தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் சம்பா அறுவடை முடிந்த உடன் எங்க ஊர் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து மாடுகளை சேகரித்து மேய்ச்சலுக்காக கொண்டு வருவோம். சுமார் 6 மாதம் வரை இங்கேயே தங்கியிருந்து மேய்ச்சலில் ஈடுபடுத்துவோம். பகலில் மாடுகளை மேய்ப்போம். இரவு வயல்களில் மாடுகளை தங்க (கிடை) வைப்போம். ஒரு இரவுக்கு கிடை வைக்க ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் அரிசியை கூலியாக பெறுவோம். ஆடுகளுக்கு ஒரு நாள் இரவு கிடை வைக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை வாங்குவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story