தீபாவளி போனஸ் கொடுக்காததால் விரக்தி கடையின் முன் குப்பை கொட்டிய தூய்மைப்பணியாளர்
கோவையில் தீபாவளி போனஸ் கொடுக்காததால் விரக்தியில் தூய்மை பணியாளர் ஒருவர் கடை முன்பு குப்பையை போட்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை
கோவையில் தீபாவளி போனஸ் கொடுக்காததால் விரக்தியில் தூய்மை பணியாளர் ஒருவர் கடை முன்பு குப்பையை போட்டு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தீபாவளி போனஸ்
கோவை வெரைட்டிஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 38). இவர் கோவை ஆர்.எஸ். புரம் ராமச்சந்திரா ரோட்டில் விளம்பர பலகைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை எழுதும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம், கடந்த 4-ந் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் பிறகு தருகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி தூய்மைப் பணியாளர் கடை அருகே கிடந்த குப்பையை எடுத்து, ஜேம்சின் கடை முன்பு போட்டார். இந்த காட்சி கடையின் முன்பு வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கடைக்காரர் தீபாவளி போனஸ் தராத விரக்தியில் அவரது கடை முன்பு குப்பைகளை தூய்மை பணியாளர் ஒருவர் போட்டு சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை
இந்த வீடியோவை பார்த்ததும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த செயலில் ஈடுபட்டது தூய்மை பணியாளர் நடராஜ் என்பவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கடைக்காரர் ஜேம்ஸ் கேட்டுக் கொண்டதின் பேரில் நடராஜை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.இதுகுறித்து ஜேம்ஸ் கூறும்போது, எனது கடை முன்பு இது போன்று பலமுறை குப்பைகள் போடப்பட்ட சம்பவங்கள் அரங்கேரி உள்ளது. இதற்காகவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எனது கடை முன்பு கண்காணிப்பு கேமராவை வைத்தேன். ஆனால் இந்த செயலை தூய்மை பணியாளர் ஒருவரை செய்து இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அவர் மீது எவ்வித புகார் கொடுக்காமல் மனிதாபிமான அடிப்படையில் அவரை விட்டுவிட அதிகாரியிடம் கேட்டுக் கொண்டேன். இதுபோன்று பிற இடங்களிலும் நடக்காமல் இருக்க வேண்டும். என்றார்.