சாஸ்திரி பவனில் முழு உருவ சிலை: "லால்பகதூர் சாஸ்திரியின் பசுமை இயக்கத்தால் உலகிற்கே உணவளிக்கும் நிலைக்கு உயர்ந்தோம்"


சாஸ்திரி பவனில் முழு உருவ சிலை: லால்பகதூர் சாஸ்திரியின் பசுமை இயக்கத்தால் உலகிற்கே உணவளிக்கும் நிலைக்கு உயர்ந்தோம்
x

சாஸ்திரி பவனில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்த, கவர்னர் ஆர்.என்.ரவி “சாஸ்திரியின் பசுமை இயக்கத்தால் உலகிற்கே உணவளிக்கும் நிலைக்கு உயர்ந்தோம்” என்று பேசினார்.

சென்னை

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் ரூ.15 லட்சம் செலவில் 9½ அடி உயரத்தில் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் முழு உருவ வெண்கலை சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா சாஸ்திரி பவனில் நேற்று நடந்தது. லால்பகதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளையின் தலைவர் அணில்குமார் சாஸ்திரி தலைமை தாங்கினார்.

மத்திய பொதுப்பணித்துறை சென்னை மண்டல இயக்குனர் ஜெனரல் ராஜேஷ்குமார் கவுசால் வரவேற்றார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, விழாவில் கலந்து கொண்டு ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

லால்பகதூர் சாஸ்திரி தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தாலும் பொது வாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டவர். ஜெய் ஜவான், ஜெய் கிஸான் முழக்கத்தை செயல்படுத்தி தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றார்.

நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்திய பாதுகாப்பு துறையின் தேவை கருத்தில் கொள்ளப்படாததால் காஷ்மீரின் பெரும் பகுதிகளை எதிரிகளிடம் இழந்தோம். ஆக்கிரமிப்பு, ஊடுருவல் போன்றவற்றால் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து நிலவியது. இதே போன்று கடும் வறட்சி ஏற்பட்டு உணவு பஞ்சத்தால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது. ஊடுருவலால் நாட்டின் எல்லையிலும், மக்களுக்கு உணவளிக்க முடியாமல் நாடு பெரும் அவமானத்தை சந்தித்தது.

1965-ம் ஆண்டு போர் வெற்றிக்கு பிறகு நாட்டின் வலிமையை அனைவரும் உணர்ந்தோம். லால் பகதூர் சாஸ்திரி அமைத்துக் கொடுத்த பசுமை இயக்கம் மூலம் உணவுத் தேவையை பூர்த்தி செய்து உலகிற்கே உணவை வழங்கி வருகிறோம். உலகின் எந்த மூலையில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், இந்தியா தானாக முன்வந்து உணவை வழங்கி வருகிறது.

லால்பகதூர் சாஸ்திரி தேசத்திற்கு ஆற்றிய பங்களிப்பை மறக்க முடியாது. 2047-ம் ஆண்டு சுதந்திர தின நூற்றாண்டின் போது உலகின் வழிகாட்டியாக இந்தியாவை மாற்றிக் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story