தர்மபுரியில் வருகிற 21-ந் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா-நலத்திட்டங்கள் குறித்து பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கலாம்


தர்மபுரியில் வருகிற 21-ந் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா-நலத்திட்டங்கள் குறித்து பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கலாம்
x
தினத்தந்தி 16 Dec 2022 6:45 PM GMT (Updated: 16 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா வருகிற 21-ந் தேதி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

உரிமைகள் தின விழா

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், பாரசீகர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சிறுபான்மையினருக்கான உரிமைகள் மற்றும் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி நடப்பாண்டிற்கான சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் பகல் 11 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

கருத்து தெரிவிக்கலாம்

இந்த கூட்டத்தில் சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினருக்கான திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

எனவே சிறுபான்மை இனத்தை சேர்ந்த பொதுமக்கள், சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கூட்டத்தில் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story