கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்க வேண்டும்
ஆதிசக்தி விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்,
பொள்ளாச்சி
ஆதிசக்தி விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்,
கோவில் கும்பாபிஷேகம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது பொள்ளாச்சி நகராட்சி 19-வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி நகரில் உள்ள ஆதிசக்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்யப்படும் என்று கூறி கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி பாலாயம் நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேகம் நடைபெறும் வரை கோவிலின் அருகில் உள்ள அமுதமண்டபத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 3 மாதங்களாக எந்தவித திருப்பணிகளோ அல்லது கும்பாபிஷேகம் சம்பந்தமாக எந்தவித நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள், பொதுமக்கள் விநாயகரை வழிபட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளோம். எனவே இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக தலையீட்டு கோவிலுக்கு நிதி ஒதுக்கி கும்பாபிஷேகம் நடத்த ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போலீசார் அபராதம்
கொ.ம.தே.க. இளைஞர் அணியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி நகரில் சப்-கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், எஸ்.பி.ஐ. வங்கி போன்ற மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடங்களில் வாகன நிறுத்தும் இடம் இல்லாததால் வேறு வழி இல்லாமல் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்கின்றனர். ஆனால் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு எந்தவித அறிப்புமின்றி அபராதம் விதிக்கின்றனர். இதில் அதிகமாக கிராமங்களில் இருந்து வருவோர் தான் பாதிக்கப்படுகின்றனர். மேற்கண்ட அலுவலகங்களை சுற்றி போலீசார் நோ பார்க்கிங் பகுதிகளை வரையறை செய்து உள்ளது போன்று, பார்க்கிங் பகுதிகளை வரையறை செய்து பதாகைகளை வைக்க வேண்டும். அதுவரை போலீசார் அபராதம் விதிப்பதை தவிர்க்க பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.