சர்வதேச பல்கலைக்கழகங்களோடு ஒத்துழைக்க ஜி20 கல்வி பணிக்குழுக் கூட்டத்தில் முடிவு -மத்திய அரசு தகவல்


சர்வதேச பல்கலைக்கழகங்களோடு ஒத்துழைக்க ஜி20 கல்வி பணிக்குழுக் கூட்டத்தில் முடிவு -மத்திய அரசு தகவல்
x

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்று ஜி20 கல்வி பணிக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தியா தலைமையேற்றுள்ள ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கருத்தரங்கங்கள், கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அந்த வகையில் சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி வளாகத்தில் முதலாவது ஜி20 கல்வி பணிக் குழுவின் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்க கூட்டம் கடந்த 31-ந் தேதி நடந்தது. இந்த கருத்தரங்கில் ஜி20 அமைப்பில் உள்ள 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு நாடுகள், யுனிசெப் போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகள் பங்கேற்றன.

இந்த கருத்தரங்கத்தில் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, துருக்கி, மொரிஷியஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர், பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று உரையாற்றினர். தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா, நான் முதல்வன் திட்டத்தைப் பற்றி விளக்கம் அளித்தார்.

2 நாள் கூட்டம் நிறைவு

அதைத்தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 2 நாட்களாக ஜி20 கல்வி பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் நேற்று மாலை முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அங்கு பத்திரிகையாளர்களுக்கு கல்வி பணிக்குழு தலைவரும், மத்திய உயர்கல்வித்துறை செயலாளருமான சஞ்சய் மூர்த்தி, மத்திய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சஞ்சய்குமார் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

சென்னையில் நடைபெற்ற ஜி20 கல்விப் பணிக்குழுவின் 2 நாள் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஜி20 உறுப்பு நாடுகளில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி பற்றிய சிறந்த நடைமுறைகள் பெருமளவில் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.

ஒத்துழைப்பு

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள உறுப்பு நாடுகள் சந்திக்கும் கல்வி தொடர்பான சவால்களை எதிர்கொண்டு நிலையான நீண்ட தீர்வுகளைக் கண்டறிவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. எதிர்கால பணிச்சூழலில் வாழ் நாள் முழுவதும் கற்றல் திறனை மேம்படுத்தவது போன்ற முக்கிய இலக்குகளுக்கு முன்னுரிமை தருவதில் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டினர்.

அனைவரையும் உள்ளடக்கிய சமமான, பொருத்தமான, தரமானக் கல்வி மற்றும் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை வழங்குவது ஆகியவை பற்றி விரிவான முறையில் கூட் டத்தில் விவாதிக்கப்பட்டது.

நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றலை மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்று ஜி20 கல்விப் பணிக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 கல்வி பணிக்குழுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள கடைசி கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும்.

திறன் மதிப்பீடு

தேசிய கல்விக்கொள்கையின் கீழ் 50 சதவீத பள்ளிக் குழந்தைகள் வரும் காலத்தில் திறன் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். இந்தத் திறமைகளை உருவாக்குவதற்கும், அங்கீகாரம் அளிப்பதற்கும் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படும். திறன் மதிப்பீடு செய்வதற்கு ஒரு செயல் திட்டம் வகுக்கப்படும். தீக்ஷா தளம் மற்றும் கல்வி தொடர்பாக செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் பாராட்டினர்.

இந்த கூட்டத்தின் முடிவுகள் ஆவணப்படுத்தப்பட்டு அதுபற்றிய விவாதங்கள் அடுத்ததாக அமிர்தசரஸ் நகரில் மார்ச் 15-ந் தேதி முதல் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் முன்வைக்கப்படும். வரும் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. 56-க்கும் மேற்பட்ட ஜி20 கூட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை இந்தக் கூட்டங்கள் ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story