விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 1,226 விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது


விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள  1,226 விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு  இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது
x

விழுப்புரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 1,226 விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

விழுப்புரம்


விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நாளில் வீடுகளில் மட்டுமல்லாது சாலைகளின் முக்கிய இடங்களிலும், கோவில்கள் முன்பும் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் காவல் உட்கோட்டத்தில் 625 இடங்களில் விநாயகர் சிலைகளும், திண்டிவனம் உட்கோட்டத்தில் 203 சிலைகளும், செஞ்சி உட்கோட்டத்தில் 339 சிலைகளும், கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் 59 சிலைகளும் என 5 அடி உயரத்தில் இருந்து 12 அடி வரையில் மொத்தம் 1,226 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இன்று சிலைகள் கரைப்பு

இந்த சிலைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 4, 6-ந் தேதிகளில் வாகனங்கள் மூலம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாவட்ட நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

அதன்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களான கிழக்கு கடற்கரையில் பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் மற்றும் வீடூர் அணை ஆகிய இடங்களில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கடலூர் தேவனாம்பட்டினத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள கடலில் கரைக்கப்படுகிறது.

பலத்த பாதுகாப்பு

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விநாயகர் சிலைகள் ஊர்வலமானது அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டு செல்ல வேண்டும், மாற்றுப்பாதையில் செல்லக்கூடாது, ஊர்வலமானது எந்த நிலையிலும் பிரிந்து செல்லாமல் ஒரே அணியாக செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ஊர்வல அமைப்பாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளதோடு, இந்த விதிமுறைகள் மீறப்படுமானால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.


Next Story