விநாயகர் சதுர்த்தி விழா:சிலை வழிபாட்டில் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைதுணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


விநாயகர் சதுர்த்தி விழா:சிலை வழிபாட்டில் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைதுணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம்


வருகிற 28-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் வைக்கும் குழுவினர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசிதாவது:-

விநாயகர் சிலைகள் ரசாயன பொருட்களால் தயார் செய்யப்படக்கூடாது. களிமண் மற்றும் காகித கூழ் போன்றவற்றால் மட்டுமே தயார் செய்யப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத அனுமதிக்கப்பட்ட பொருட்களையே பயன்படுத்திட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட இடங்கள்

நிபந்தனைகளை மீறி தயார் செய்யப்படும் சிலைகள், நீரில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. சிலை அமைப்பதற்கு கோட்டாட்சியர், தீயணைப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். சென்ற ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்களில் சிலைகளை அமைக்க கூடாது. சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடத்தில் கூம்பு ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த கூடாது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு டிஜிட்டல் பேனர்களை கண்டிப்பாக வைக்கக்கூடாது.

அதேபோன்று, விநாயகர் சதுர்த்தி ஊர்வலமானது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும், மாற்றுப்பாதையில் செல்லக்கூடாது.

வீதிகளை மீறினால் அனுமதி ரத்து

சிலைகள் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தல் கூடாது. ஊர்வலம் எந்தவொரு பகுதியிலும் நிறுத்தப்பட்டு ஊர்வலத்தினர் கோஷங்கள் எழுப்புவது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.

மேலும் ஊர்வலத்தின்போது பொது, தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகள் ஊர்வலம் முடிந்தவுடன் அதில் கலந்துகொண்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும். ஊர்வலத்திற்கான விதிமுறைகள் மீறப்பட்டால் ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும் அனுமதியை ரத்து செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

இதில் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், மூர்த்தி, செல்வராஜ், ஆனந்தன், விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, பாஸ்கரன், கோபி, அன்பழகன், மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story