கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா: 538 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு-கோவில்களில் சிறப்பு பூஜை


கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 538 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. அதுபோன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

கோயம்புத்தூர்


கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 538 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. அதுபோன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் கோவில், ராம்நகர் விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில் உள்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அங்குள்ள 19½ அடி உயரமுள்ள விநாயகர் சிலைக்கு பூக்கள், வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் விநாயகர் ராஜஅலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

இந்த கோவிலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை வழிபாட்டு சென்றனர். இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால் அந்த பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு இருந்தது. மேலும் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள 108 விநாயகர் கோவிலில் சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் கோவில்களில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. இங்கு காலையில் இருந்தே பொதுமக்கள் அங்கு குவிந்து விநாயகரை வழிபட்டு சென்றனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மருதமலை பஞ்ச முக விநாயகர்

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் உள்ள பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பஞ்ச விருச்சங்களுக்கு மத்தியில் இந்த விநாயகர் காட்சி அளிப்பதால் இவருக்கு பஞ்சவழிச்சவனாக என்று பெயர். இந்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பஞ்சவிருட்ச விநாயகர் காட்சியளித்தார். விநாயகர் சதுர்த்தி என்பதால் மருதமலை கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பஞ்சவிருட்சவிநாயகரை தரிசனம் செய்தனர்.

538 சிலைகள்

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் 308, இந்து மக்கள் கட்சி (தமிழகம்) 120, பாரத்சேனா 40 உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் மொத்தம் 538 சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்து முன்னணி சார்பில் 1 முதல் 9 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

அதில் ரத்தினபுரியில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. அதுபோன்று அங்கு வைக்கப்பட்டு இருந்த பாகுபலி விநாயகர் சிலையை ஏராளமானோர் வழிபட்டு சென்றனர். இதில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

13 அடி உயர சிலை

இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் 11½ அடி உயர ராஜகணபதி விநாயகர் சிலை வைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், மாநில செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரத் சேனா சார்பில் சிவானந்தாகாலனியில் 13 அடி உயர வெற்றி விநாயகர் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் செந்தில்கண்ணன், மாவட்ட அமைப்பாளர் குமரேசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.

வெற்றிவிநாயகர் கோவில்

மேலும் கோவை கணபதிமாநகர் பகுதியில் உள்ள வெற்றிவிநாயகர் கோவிலில் விநாயகர் சிவசக்தி கணபதி அலங்காரத்துடன் தனது தாய்-தந்தையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அங்கு 108 சங்கு பூஜை, கணபதி ஹோமம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதை தொடர்ந்து லட்சார்ச்சனையும், அன்னதானமும் நடந்தது. பின்னர் மாலையில் தேரோட்டமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் பானுமதி நீலமேகம், செயலாளர் வி.முருகன், பொருளாளர் அரங்கநாதன் உள்பட பலர் செய்து இருந்தனர்.

பலத்த பாதுகாப்பு

கோவை மாநகர பகுதியில் வைக்கப்பட்டு இருக்கும் விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதுபோன்று புறநகர் பகுதிகளில் 1,556 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்தன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 2094 சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story