கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்


கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்களில் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகரில் 350 இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

மதுரை

விநாயகர் சதுர்த்தியையொட்டிகோவில்களில் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நகரில் 350 இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை நகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்படி கூடலழகர்பெருமாள் கோவில் அருகே அந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட விநாயகர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், ராமர், ஆஞ்சநேயர், கருப்பசாமி, ராகு, கேது உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி நேற்று விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

ஆத்திக்குளம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது. மாலையில் உற்சவ விநாயகர் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலமாசி வீதி நேரு ஆலால சுந்தரவிநாயகர் கோவிலில் நேற்று காலை முதல் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

சிலைகளை கரைக்க தற்காலிக ஏற்பாடு

இது தவிர இந்துமுன்னணி, பாரதீய ஜனதா, அகில பாரத இந்து மகா சபா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் நகரில் பல்வேறு இடங்களில் 350-க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிலைகளுக்கு 24 மணி நேரமும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த நிலையில் சிலைகள் இன்றும், நாளையும் ஊர்வலமாக நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து வைகை ஆற்றில் கரைக்கப்பட உள்ளது. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சிம்மக்கல் பகுதியில் உள்ள வைகை ஆற்றுக்குள் மாநகராட்சி சார்பில் தற்காலிக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதில் 100-க்கும் மேற்பட்ட லாரியில் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பி அதில் சிலைகள் கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story