விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு


விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
x

திருச்சி மாநகரில் மேள தாளம் முழங்க விடிய, விடிய ஊர்வலமாக எடு்த்துவரப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

திருச்சி

திருச்சி மாநகரில் மேள தாளம் முழங்க விடிய, விடிய ஊர்வலமாக எடு்த்துவரப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்படி திருச்சி மாநகரில் 290 சிலைகளும், புறநகரில் 950 சிலைகளும் என 1,240 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் பூஜைகள் செய்யப்பட்டன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விநாயகரை வழிபட்டனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஆற்றில் கரைக்கப்பட்டன.

திருச்சி மாநகரில் தில்லைநகர், உறையூர், பாலக்கரை, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், விமானநிலையம், காந்திமார்க்கெட், கருமண்டபம், சுப்பிரமணியபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளும், புறநகரில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த சிலைகளும் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

சிலைகள் கரைப்பு

பொதுமக்கள் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் விநாயகர் சிலைகளை எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றில் கரைத்து விட்டு திரும்பி சென்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சவுக்கு மரத்தால் ஆன தடுப்புகளும் கட்டப்பட்டு இருந்தன. காவிரி பாலத்தில் ஒவ்வொரு சிலையாக வரிசையாக அனுமதிக்கப்பட்டு மேடை மீது வைத்து ஆற்றில் வீசப்பட்டன. அதிக உயரம் கொண்ட சிலைகள் மட்டும் கிரேன் உதவியுடன் ஆற்றில் கரைக்கப்பட்டன. போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தபடி சிலைகளை கரைக்கும் பணியை முறைப்படுத்தினர்.

சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்படும் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது.

விடிய, விடிய கரைப்பு

இதையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனம் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

கடந்த ஆண்டுகளில் விநாயகர் சிலைகளை கரைக்க மாலை 4 மணிக்கெல்லாம் ஊர்வலம் புறப்பட்டுவிடும். நள்ளிரவுக்குள் பாதிக்கும் மேலான சிலைகள் கரைக்கப்பட்டுவிடும். ஆனால் இந்த ஆண்டு நேற்று இரவு 7 மணி வரை 6 சிலைகள் மட்டுமே கரைக்கப்பட்டன. அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு சில சிலைகள் கரைக்கப்பட்டாலும், திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த சிலைகள் ஊர்வலம் காவிரி பாலத்துக்கு வந்து சேர தாமதம் ஏற்பட்டது. இதனால் விடிய, விடிய சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கரைக்கப்பட்டன.


Related Tags :
Next Story