புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டன. இந்தநிலையில் விநாயகர் சிலைகள் நேற்று 3-வது நாளாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

திருப்புனவாசல் பகுதியில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் 7 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட ஊர்வலம் திருப்புனவாசல் கடைவீதி, பொய்யாத நல்லூர், அரசங்கரை முத்துக்குடா, சேமங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று அரசு நகரி பட்டணம்தூண்டி கருப்பர் அய்யனார் கோவில் அருகே உள்ள கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

ஆவுடையார்கோவில், காரையூர்

ஆவுடையார்கோவில் மேலவீதியில் இருந்து ஒரு விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று நான்கு வீதிகளில் சுற்றி குறிச்சிக்குளம் ஊரணியில் கரைத்தனர். இதேபோல் ஆவுடையார்கோவில் பூங்குடி கிராமத்திலிருந்து ஒரு விநாயகர் சிலையை மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று குறிச்சிக்குளம் ஊரணியில் கரைத்தனர்.

காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் சந்தை பேட்டையில் 5 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். பின்னர் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் வாண வேடிக்கையுடன் சந்தைப்பேட்டையில் தொடங்கி ஒலியமங்கலம் சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று மேலத்தானியம் செட்டி ஊரணியில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

ஆலங்குடி

ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தாரை, தப்பட்டை முழங்க ஆலங்குடிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் சித்தி விநாயகர் குளக்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி ஆலங்குடியில் நேற்று மதியத்திற்கு பிறகு அனைத்து கடைகளும் மூடப்பட்டன.


Next Story