விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

சதுர்த்தியையொட்டி பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
சதுர்த்தியையொட்டி பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 42 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்நிலையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக நேற்று எடுத்து செல்லப்பட்டன. இதையொட்டி சிலைகள் அனைத்தும் வழிவிடு முருகன் கோவில் அருகே நேற்று மாலை வந்தடைந்தன. அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கி நொச்சியூரணிக்கு வந்தது.
பின்னர் ஒவ்வொரு சிலைகளாக பூஜை செய்து ஊருணியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் மனோகர், மாவட்ட செயலாளர் சக்திவேல், நகர் தலைவர் பாலமுருகன், பொது செயலாளர் ஆதிபிரபு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சுப.நாகராஜன், ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் ஆடல் அரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலில் கரைப்பு
இதே போல் ராமேசுவரம் பகுதியில் இந்துமக்கள் கட்சி சார்பில் 12 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டன. இதில், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன், ராமேசுவரம் நகர சபை சேர்மன் நாசர் கான், துணை சேர்மன் பிச்சை தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர்கள் கெங்காதரன், ரெத்தினசபாபதி, மாவட்ட பொருளாளர் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் குமரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி திருச்சி கோட்டை செயலாளர் போஜராஜன் கலந்துகொண்டார். 60 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெருமாள்கோயில் படித்துறை வைகையாற்றில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி நகர் பொது செயலாளர் திருமுருகன் நன்றி கூறினார். இதைெயாட்டி கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு காந்தி, பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊர்வலம்
திருவாடானையில் விநாயகர் சிலை பொறுப்பாளர் கோபிநாத் கதிரேசன் தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சிலை சந்தைப்பேட்டை ஊருணியில் கரைக்கப்பட்டது.
இதில் திருவாடானை ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் கண்ணன், ரெத்தினம், ரமேஷ், அண்ணாதுரை, தொண்டி சக்திவேல், ஆலம்பாடி காளிமுத்து, முத்துராமலிங்கம், ராமமூர்த்தி, நீலகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.