ஈரோட்டில் விநாயகர் சிலைகள் அமைப்பு பணிகள் தீவிரம் பாதுகாப்புக்காக போலீசார் கொடி அணிவகுப்பு


ஈரோட்டில் விநாயகர் சிலைகள்  அமைப்பு பணிகள் தீவிரம்  பாதுகாப்புக்காக போலீசார் கொடி அணிவகுப்பு
x

ஈரோட்டில் விநாயகர் நிலை அமைப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ள நிலையில், பாதுகாப்பு கொடி அணிவகுப்பை போலீசார் நடத்தினார்கள்.

ஈரோடு

ஈரோட்டில் விநாயகர் நிலை அமைப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ள நிலையில், பாதுகாப்பு கொடி அணிவகுப்பை போலீசார் நடத்தினார்கள்.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை அமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 1008 இடங்களில் சிலை வைக்கும் நோக்கத்தில் பல்வேறு இடங்களிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

ஈரோட்டில் சம்பத்நகரில் 11 அடி உயர வீர விநாயகர் சிலை மூல விநாயகராக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதுபோல் மாநகரில் நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் சிலை அமைக்க, பந்தல்கள் போடப்பட்டு வருகின்றன. சிலைகள் தயாரிக்கப்பட்ட இடங்களில் இருந்து பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களுக்கு வாகனங்களில் சிலைகள் கொண்டுசெல்லப்படுகின்றன.

பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி மற்றும் சிலை கரைப்பு ஊர்வலங்களை பாதுகாப்புடனும், அசம்பாவிதங்கள் ஏதுமின்றியும் நடத்த ஈரோடு மாவட்ட போலீஸ் துறை தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொதுமக்கள் அதிகம்கூடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் பகுதிகள், ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கொடி அணிவகுப்பு

ஈரோடு மாநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடி அணிவகுப்பு நேற்று மாலை நடந்தது.

ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் நடந்த இந்த அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர்கள் தெய்வராணி (டவுன்), நிர்மலாதேவி (மகளிர்), சோமசுந்தரம் (தாலுகா), சண்முகம் (வீரப்பன்சத்திரம்), ராஜபிரபு (கருங்கல்பாளையம்) ஆகியோர் தலைமையில் அந்தந்த காவல்நிலைய போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மேம்பாலம் பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோவில் வழியாக கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நிறைவடைந்தது.


Next Story