விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 23 Sept 2023 1:15 AM IST (Updated: 23 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. அதில், இந்து மக்கள் கட்சியினர் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். இந்தநிலையில் நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் கொடைக்கானலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு நாயுடுபுரம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது.

இந்த ஊர்வலத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் தலைவர் முரளி ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். நாயுடுபுரத்தில் தொடங்கிய ஊர்வலம், கொடைக்கானல் பணிமனை, ஏரிச்சாலை, பஸ்நிலையம், அண்ணா சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்தின்போது சாரல் மழை பெய்தது. இருப்பினும் மழையில் நனைந்தபடியே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சியினர், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு ஆட்டம், பாட்டத்துடன் சென்றனர்.

திண்டுக்கல், பழனி

இதேபோல் பழனியில் சிவசேனா, இந்து மக்கள் கட்சி, இந்து மகாசபா சார்பில் 116 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பழனி சண்முகநதியில் கரைக்கப்பட்டது. முன்னதாக பாதவிநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ்நிலையம், காந்தி மார்க்கெட், ரதவீதி, காரமடை வழியே சண்முகநதியை அடைந்தது. இந்த ஊர்வலத்தையொட்டி பழனியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் நகர் பகுதி, மேட்டுப்பட்டி, பாரதிபுரம், வேடப்பட்டி, நல்லாம்பட்டி, என்.ஜி.ஓ. காலனி, கொத்தம்பட்டி உள்பட 16 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது. இந்தநிலையில் அந்த சிலைகள் அனைத்தும் சரக்கு வேன்கள் மூலம் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே கொண்டுவரப்பட்டன. பின்னர் இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா தலைமையில் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோட்டைக்குளம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது. மாநகராட்சி அலுவலக சாலை, காந்திமார்க்கெட், குமரன் பூங்கா வழியாக கோட்டைக்குளத்துக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, கரைக்கப்பட்டது.


Related Tags :
Next Story