தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பத்தூரில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வந்து இறங்கி உள்ளது. இந்த சிலைகள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்,
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பத்தூரில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வந்து இறங்கி உள்ளது. இந்த சிலைகள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா என்பது நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் விழாவாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் போது விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து அதன் பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து திருப்பத்தூர் கல்வெட்டுமேடு பகுதியில் தற்போது ஏராளமான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்து இறங்கி உள்ளது. இதுகுறித்து விநாயகர் சிலை விற்பனை ஒருங்கிணைப்பாளரும், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னிபாலா கூறியதாவது:- மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காரைக்குடி புதுவயல், கல்லல், திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
ரூ.30 ஆயிரம் வரை
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பத்தூர் கல்வெட்டுமேடு பகுதியில் 140 விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்து இறக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் கிழங்கு மாவு மூலமும் தயார் செய்யப்பட்ட நிலையில் எவ்வித ரசாயன கலவையும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த சிலைகள் நீர்நிலைகளில் எளிதாக கரையும் தன்மை கொண்டதாகும். மேலும் இங்கு 3 அடி முதல் 30 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் கலை நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை, ராமநாதபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இங்கு வந்து இந்த சிலையை ஆர்டராக கொடுத்துவிட்டு சென்றுள்ளனர். விரைவில் அந்தந்த பகுதிகளுக்கு விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.