சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்
விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காமல் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளனர்.
ராமநாதபுரம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழலை பாதிக்காமல் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களுக்கு மிகப்பெரிய கடமை உள்ளது. நீர் நிலைகள் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. எனவே நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது குறித்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பாலிஸ்டிரின் இல்லாத, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இயற்கை சாயங்கள்
சிலைகளின் மீது உள்ள ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த அனுமதி இல்லை. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்கவும் பந்தல்களை அலங்கரிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு கலந்த மக்காத ரசாயன சாயம், எண்ணெய் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தகூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சு இல்லாத இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும்.
ஒத்துழைக்க வேண்டும்
சிலைகளை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட ஆடைகளை பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.
மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.