விநாயகர் சிலைகளை 6 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடும் சிலைகளை 6 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடும் சிலைகளை 6 இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள்
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அப்போது வழிபடப்படும் விநாயகர் சிலைகள் களிமண், சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்டவை மட்டுமே நீர் நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்கள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்த வேண்டும். சிலைகளை அலங்கரிக்க, பந்தல் அமைக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
6 இடங்களில் அனுமதி
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு மக்காத ரசாயன எண்ணெய் வண்ணப்பூச்சுகள், எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சிலைகளுக்கு இயற்கை ரசாயனங்களால் செய்யப்பட்ட ஆடைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
சிலைகளை திருப்பத்தூர் ஆதியூர் ஏரி, நாட்டறம்பள்ளி கல்லுகுட்டை ஏரி, ஆம்பூர் சான்றோர்குப்பம் ஏரி, ஆனைமடுவு ஏரி, ஜோலார்பேட்டை பொன்னேரி ஏரி, வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஏரி ஆகிய இடங்களில் மட்டுமே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.