விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்


விநாயகர் சிலைகள் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 அடிக்கு மிகாமல் விநாயகர் சிலைகள் இருக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.

ராணிப்பேட்டை


ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 அடிக்கு மிகாமல் விநாயகர் சிலைகள் இருக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித பாதிப்பு இல்லாமலும், மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவ சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒலிபெருக்கி

மேலும் விண்ணப்பத்துடன் சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் தனியார் இடமாக இருப்பின் நில உரிமையாளர் இசைவு கடிதமம், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையின் ஆட்சேபனையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒலிபெருக்கி வைப்பதற்கு அனுமதி பெற வேண்டும். கீற்று கொட்டகை அமைத்து சிலை நிறுவுவது தவிர்க்கப்பட வேண்டும்.

மேலும் மின் இணைப்பு எங்கிருந்து பெறப்படுகிறது என்பதற்கான சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலரின் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் உரிய அனுமதி சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் மூலமாக வழங்கப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகள் எளிதில் நீரில் கரையக்கூடிய வகையிலான களிமண் கொண்டு மட்டுமே செய்யப்பட வேண்டும். இவைகள் மீது வேதியியல் கலந்து வர்ணம் பூசியிருத்தல் கூடாது.

சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாரிஸ் சாந்து கொண்டு சிலைகள் செய்யப்பட கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொட்டகைக்கு உட்பகுதியில் வைக்கக்கூடாது.

10 அடிக்கு மிகாமல்

விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள சிலைகள் அதன் அடிப்பாகம் உள்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலைகள் அமைக்க கூடாது. விழாக்குழுவினர் சார்பாக இருதன்னார்வலர்கள் 24 மணி நேரமும் நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

சிலை நிறுவப்பட்ட நாளில் இருந்து 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்திடல் வேண்டும்.

சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலங்கள் பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று கரைக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து விழா நிகழ்வுகளையும் மாலை 6 மணிக்குள் முடித்துவிடல் வேண்டும்.

சிலைகள் ஊர்வலத்தின் போதோ, கரைக்கப்படும் போதோ எவ்வித வெடிப்பொருட்களும் வெடித்தல் கூடாது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் உள்ளாட்சி துறையினர் மூலம் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் நெகிழி இல்லாத விநாயகர் சதுர்த்தி விழா நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story