விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன
விநாயகர் சதுர்த்தியன்று வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக திருச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
3 நாட்கள் சிறப்பு வழிபாடு
பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 31-ந் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் பெரம்பலூர் புறநகர் பகுதி மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய 4 தாலுகாக்களில் பல்வேறு பகுதிகளில் போலீசார் அனுமதியுடன் மொத்தம் 126 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஊர்வலம்
பெரம்பலூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஊர்வலத்திற்கு இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். அமைப்பின் நகர தலைவர் கண்ணன், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை ஐகோர்ட்டு வக்கீல் பிரபாகரன், அமைப்பின் மாநில செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஊர்வலத்தை விசுவ இந்து பரிஷத்தின் மாவட்ட செயலாளர் ஹரிகரன் தொடங்கி வைத்தார். இந்து முன்னணியினர், விநாயகர் பக்தர்கள், இந்து இயக்கங்களின் நிர்வாகிகள், விநாயகர் ஊர்வல கமிட்டி நிர்வாகிகள், இளைஞர்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி காவிரி ஆற்றில்...
ஊர்வலம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் புறப்பட்டு காமராஜர் வளைவு, வடக்கு மாதவி சாலை, சாமியப்பா நகர், எளம்பலூர் சாலை, காமராஜர் சிக்னல், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக மீண்டும் காந்தி சிலையை அடைந்தது. பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அதன் பிறகு திருச்சிக்கு சரக்கு வாகனங்களில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சதுர்த்தியன்றும், நேற்று முன்தினமும், நேற்றும் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களிலேயே கரைக்கப்பட்டன. அதில் சில சிலைகள் திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.