நகை வியாபாரிகளை தாக்கி ரூ.4 லட்சம் பறித்த கும்பல் கைது


நகை வியாபாரிகளை தாக்கி ரூ.4 லட்சம் பறித்த கும்பல் கைது
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கரை அருகே நகை வியாபாரியை தாக்கி ரூ.4 லட்சம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

மதுக்கரை

மதுக்கரை அருகே நகை வியாபாரியை தாக்கி ரூ.4 லட்சம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகை வியாபாரிகள்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்டநாடு பகுதியை சேர்ந்தவர்கள் ரோகித் (வயது 25), பரத் (25). நகை வியாபாரிகள். இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் தங்க நகைகளுடன் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் அந்த நகைகளை கோவை ராஜவீதியில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்தனர்.

அதன் மூலம் கிடைத்த ரூ.4 லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் பாலக்காடு திரும்பினார்கள். க.க.சாவடியில் இருந்து வேலந்தாவளம் சாலையில் உள்ள பிச்சனூர் அருகே சென்றபோது திடீரென்று ஒரு கார் அவர்கள் 2 பேரையும் வழிமறித்தது.

ரூ.4 லட்சம் பறிப்பு

உடனே அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அத்துடன் அந்த காரில் இருந்தும் 3 பேர் இறங்கினார்கள். அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரோகித், பாரத் ஆகியோரிடம் இருந்த ரூ.4 லட்சத்தை மிரட்டி பறித்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தப்பி ஓடிய 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

3 பேர் கைது

அதில் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த ரஞ்சித் (22), அபினேஷ் (27), ரஞ்சித்குமார் (32) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் கொழிஞ்சாம்பாறை சென்று அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், நகை வியாபாரிகளை தாக்கி பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் ரஞ்சித், அபினேஷ், ரஞ்சித்குமார் ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரைபோலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story