அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்: 2 வாலிபர்கள் கைது


அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்: 2 வாலிபர்கள் கைது
x

மகனின் புகைப்படத்தை மாணவியுடன் ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 45). இவர் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பிளஸ்-2 படித்து வரும் மகன் 'நீட்' தேர்வுக்காக பயிற்சிக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வரும் உதயகுமாருடன் அந்த மாணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. மாணவரின் பெற்றோர் டாக்டர்களாக இருப்பதால் அவர்களிடம் இருந்து பணம் பறிக்க உதயகுமார் திட்டம் தீட்டினார். இதற்காக மாணவரின் படத்தை சமூக வலைதளத்தில் இருந்து எடுத்து அதை கல்லூரி மாணவி ஒருவருடன் இருப்பது போல் ஆபாசமாக சித்தரித்தார்.

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

பின்னர் உதயகுமார், அவருடைய கடையில் வேலை பார்த்து வரும் தொளசம்பட்டியை சேர்ந்த கார்த்தி (26), குணசேகரன் (22) மற்றும் அந்த கல்லூரி மாணவியின் தாயார் என 4 பேர் வாழப்பாடிக்கு சென்று டாக்டர் ரமேஷ்குமாரை சந்தித்தனர்.

அப்போது டாக்டரிடம் அவருடைய மகன் கல்லூரி மாணவி ஒருவருடன் அரைகுறை ஆடையில் இருப்பது போன்ற ஆபாச படத்தை காண்பித்தனர். மேலும் அவர்கள், கல்லூரி மாணவியின் தாயார் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர்.

ஆனால் ரமேஷ்குமார் இது உண்மையான படம் இல்லை என்றும், இதை நான் நம்ப மாட்டேன் என்றும் கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்தி, குணசேகரன் ஆகியோர் ரமேஷ்குமார் வீட்டுக்கு மீண்டும் சென்றனர். அப்போது அவர்கள் டாக்டரிடம், கல்லூரி மாணவியின் தாயார் மன உளைச்சலில் விஷம் குடித்து விட்டார் எனவும், ரூ.10 லட்சம் கொடுக்காவிட்டால் இந்த விஷயம் பெரிதாகி விடும் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து உஷாரான ரமேஷ்குமார் இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்தி, ஞானசேகரன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் பணம் பறிக்கும் நோக்கத்தில் டாக்டர் மகனுடைய புகைப்படத்தை கல்லூரி மாணவியுடன் இணைத்து ஆபாசமாக சித்தரித்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து கார்த்தி, ஞானசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஸ்டிக்கர் கடை உரிமையாளரான உதயகுமார் மற்றும் கல்லூரி மாணவியின் தாயாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story