ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருட்டு, கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் ராகுல் என்கிற ஜெயசூர்யா. சம்பவத்தன்று இவரை மோட்டார் சைக்கிளில் வந்த வடக்குவெள்ளூரை சேர்ந்த பிரேம்குமார் மகன் சுதாகர் (வயது 25), தர்மா என்கிற தர்மராஜன் (20), வெங்கட் என்கிற வெங்கடேஷ் (20) ஆகியோர் கொலை வழக்கிற்கு, கோர்ட்டு செலவுக்காக ஏன் பணம் கொடுக்க மறுக்கிறாய் என்று கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அவர்கள் 3 பேரையும் மந்தாரக்குப்பம் போலீசார் கைது செய்தனர். இதில் கைதான சுதாகர் மீது மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்குகள், 2 வழிப்பறி வழக்குகள், நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு என மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.எனவே அவரது தொடர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு சுதாகரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் சுதாகரை குண்டர் சட்டத்தில் மந்தாரக்குப்பம் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் மத்திய சிறையில் இருக்கும் சுதாகரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.