பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:46 PM GMT)

உளுந்தூர்பேட்டை பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த வேப்பூர் வாலிபர் உள்பட 7 பேரை போலீசார் கைதுசெய்தனர்

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

தீவிர ரோந்து

உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பஸ் நிலையம் அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை

விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகன் கார்த்திக்(வயது 31) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை பையில் மறைத்து வைத்து எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது காாத்திக் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள இளைஞர்களுடன் தொடர்பு கொண்டு குழுவாக செயல்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

7 பேர் கைது

இதையடுத்து கார்த்திக் மற்றும் இவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, கடலூர் மாவட்டம் கம்மாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்(45), உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமம் தாஹா(38), உளுந்தூர்பேட்டை அன்னை செட்டியார் தெரு அருண்குமார்(22), அண்ணா நகர் பகுதி சூர்யா(22), வெங்கடேசபுரம் காலனி நாகராஜ்(33) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா, 3 இரு சக்கர வாகனங்கள், 6 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்படை

இவர்களை போல் மேலும் சிலர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை அமைத்து கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 7 பேர் கும்பலை போலீசார் கைதுசெய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story