பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றம்


பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 17 Sep 2023 10:15 PM GMT (Updated: 17 Sep 2023 10:15 PM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றப்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே பொன்னானியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதற்கிடையே வீடுகள், கடைகளில் சேகரமாகும் குப்பைகளை நெலாக்கோட்டை ஊராட்சியில் கொட்ட இடம் இல்லை. இதனால் பொன்னானியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. மழை பெய்யும் போதும், காற்று வீசும் போதும் குப்பைகள் ஆற்றுநீரில் கலந்து விடுகிறது. இந்த ஆற்று நீரை நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குப்பை கலந்த சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்படி, நெலாக்கோட்டை ஊராட்சி தலைவர் டெர்மிளா பன்னீர் செல்வம், ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி, கிருமிநாசினி தெளித்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் ஊராட்சியில் குப்பைகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


Next Story