ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள்


ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள்
x
தினத்தந்தி 16 Sept 2023 3:30 AM IST (Updated: 16 Sept 2023 3:31 AM IST)
t-max-icont-min-icon

பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அவை குடிநீரில் கலப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

நீலகிரி

பந்தலூர்

பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அவை குடிநீரில் கலப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

பொன்னானி ஆறு

பந்தலூர் அருகே பொன்னானியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு மளிகை, காய்கறி கடைகள், தேநீர் கடைகள், ஓட்டல்கள் உள்ளன. இந்தநிலையில் வீடுகள், கடைகளில் சேகரமாகும் குப்பைகளை நெலாக்கோட்டை ஊராட்சியில் கொட்ட இடம் இல்லை. இதனால் பொன்னானியில் குப்பைககள் அகற்றப்படாமல் உள்ளது.

பந்தலூரில் இருந்து உப்பட்டி, குந்தலாடி, முக்கட்டி, பிதிர்காடு வழியாக பாட்டவயல் செல்லும் இணைப்பு சாலையில் உள்ள பொன்னானியில் ஆறு ஓடுகிறது. பொன்னானியில் குப்பைககள் சேகரிக்கப்படாததால், ஆற்றங்கரையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மழை பெய்யும் போதும், காற்று வீசும் போதும் குப்பைகள் ஆற்றுநீரில் கலந்து விடுகிறது.

குப்பை தொட்டிகள்

இந்த ஆற்று நீரை நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கிராமங்களுக்கு வினியோகிக்க குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் குப்பை கலந்த சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, பொன்னானி ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். நெலாக்கோட்டை ஊராட்சியில் குப்பைகளை கொட்ட இடம் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story