தனியார் சர்க்கரை ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டதால் 2 தொழிலாளர்கள் மயக்கம்


தனியார் சர்க்கரை ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டதால் 2 தொழிலாளர்கள் மயக்கம்
x

தனியார் சர்க்கரை ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டதால் 2 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம், புகழூர் செம்படாபாளையம் பகுதியில் பாரி சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலையில் பொங்கல் பண்டிகைக்காக கரும்பு அரவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கரும்பு அரவை தொடங்க இருந்தது. அதற்காக ஆலையில் பராமரிப்பு பணி நடந்தது. அப்போது கரும்பு அரவை எந்திரம் அருகே இருந்த சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அதை சுவாசித்த ஒப்பந்த தொழிலாளர்களான திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சிலம்பரசன் (வயது 25), சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த சதீஷ் (22) ஆகியோர் மயக்கமடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை காப்பாற்ற ஓடிச் சென்ற அலுவலரான இனுங்கூரை சேர்ந்த பொன்னுசாமி (32) என்பவர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் வாயு கசிவை சரி செய்தனர். இதையடுத்து சிலம்பரசன், பொன்னுசாமி ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ் வேலாயுதம்பாளையம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றார். பின்னர் சர்க்கரை ஆலையில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. அதைக்கேட்டு அனைத்து தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் விபத்து காலங்களில் ஒன்று சேரும் இடத்தில் கூடினார்கள். அவர்களை ஆலையின் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் வேறு யாருக்கும் பாதிப்பில்லை என்பது கண்டறியப்பட்டது. பராமரிப்பு பணி நிறைவடைந்த பின் ஆலை மீண்டும் இயங்க தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story