எடப்பாடி அருகே பள்ளி சமையல் அறையில் கியாஸ் கசிந்து தீ விபத்து-பொருட்கள் எரிந்து சேதம்
எடப்பாடி அருகே பள்ளி சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
எடப்பாடி:
சமையல் கூடம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தை அடுத்த வெள்ளாளபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புது குடியானூர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு சமையல் கூடம் செயல்பட்டு வருகிறது. சமையலராக வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜமுத்து மனைவி குப்பம்மாள் (வயது 50) என்பவர் பணியாற்றி வருகிறார்.
எரிந்து சேதம்
இந்த நிலையில் நேற்று காலை பள்ளியின் சமையல் கூடத்தில் சமையலர் குப்பம்மாள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள கிடங்கில் அரிசி எடுக்க சென்ற நிலையில், திடீரென சமையல் கூடம் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தீயின் வேகம் கடுமையாக இருந்ததால் சமையல் கூடம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் சமையலறையில் இருந்த அனைத்து பொருட்களும் தீக்கிரையானது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த, எடப்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், சமையல் கூடத்தில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
தீ விபத்து ஏற்பட்டபோது மாணவர்களோ, ஆசிரியர்களோ அந்த பகுதியில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.