விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள9 தாலுகாக்களில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள9 தாலுகாக்களில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

விழுப்புரம்


பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன்பொருட்டு விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், மரக்காணம், வானூர் ஆகிய 9 தாலுகா அலுவலகங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த குடிமைப்பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களால் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் குடும்ப அட்டை பெறாத திருநங்கைகளுக்கு புதிய குடும்ப அட்டை பெற இணைய வழியில் பதிவு செய்தல், பொதுமக்கள், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கேட்டு பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு மாற்றம், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று ஆகியவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப்பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்களையும் பொதுமக்கள் பதிவு செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திருநங்கைகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மேலும் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் நிறைவேற்றிடும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொண்டு இத்திட்டத்தின் பயன்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடசுப்பிரமணியன், விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், குடிமைப்பொருள் தனி தாசில்தார் இளங்கோவன், சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் செல்வம், மண்டல துணை தாசில்தார்கள் லட்சாதிபதி, குபேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராபர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story