மானாமதுரை மண்பாண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு-தொழிலாளர்கள் வரவேற்பு


மானாமதுரை மண்பாண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு-தொழிலாளர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 31 March 2023 6:45 PM GMT (Updated: 31 March 2023 6:46 PM GMT)

மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு மத்திய அரசின் சார்பில் புவிசார் குறியீடு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என மண்பாண்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளன

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை மண்பாண்ட தொழிலுக்கு மத்திய அரசின் சார்பில் புவிசார் குறியீடு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என மண்பாண்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புவிசார் குறியீடு

தமிழகத்தில் உள்ள மணப்பாறை முறுக்கு, மானாமதுரை மண்பாண்ட பொருட்கள், மார்த்தாண்டம் தேன், மயிலாடி கற்சிற்பம், ஊட்டி வர்க்கி, ஆத்தூர் வெற்றிலை, சேலம் ஜவ்வரிசி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் உற்பத்தி செய்யும் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. மானாமதுரை மண்பாண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது மண்பாண்ட தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மானாமதுரை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கேற்ப அந்தந்த சீசனிற்கு தகுந்தாற் போல் மண் கூஜாக்கள், ஜாடிகள், தோசை, பணியார சட்டிகள், தட்டுகள், டம்ளர்கள், கோவில்களில் பயன்படுத்தப்படும் மண் ஜக்குகள், அடுப்புகள், பானைகள், சட்டிகள், நேர்த்திக்கடன் செலுத்த பயன்படுத்தப்படும் அக்னிசட்டிகள், ஆயிரங்கண் பானைகள், சுவாமி, குழந்தை உருவங்கள், குதிரை, மாடு, முளைப்பாரி ஓடுகள், கார்த்திகை தீப விளக்குகள், கஞ்சி கலயங்கள், தீர்த்த கலயங்கள், விநாயகர் சிலைகள், சுவாமி சிலைகள், கடம் மற்றும் குருவி கூடுகள் என பல்வேறு வகையான பொருட்களை கலைநயத்துடன் செய்து வருகின்றனர்.

இவ்வாறு இந்த மண்பாண்ட பொருட்கள் கொண்டு சுமார் 600-க்கும் மேற்பட்ட கலை நயமிக்க பொருட்களை செய்து வருகின்றனர். இதையடுத்து தற்போது இந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதையடுத்து இந்த மண்பாண்ட தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து உள்ளனர்.

உழைப்பிற்கு கிடைத்த பரிசு

மானாமதுரை மண்பாண்ட சொசைட்டி தலைவர் லட்சுமணன்:-

மானாமதுரை மண்பாண்டம் என்பது உலகளாவிய புகழ் பெற்ற பொருட்கள் ஆகும். இந்த மண்பாண்ட தொழிலை 350-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து வந்த நிலையில் எங்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தி வருகிறோம். மழைக்காலங்களில் மட்டும் எங்களுக்கு பல்வேறு கஷ்டமான நிலை ஏற்படும். அப்போது சொசைட்டி மூலம் சரி செய்யப்படும். எங்களது உழைப்பிற்கு கிடைத்த பரிசாக தற்போது புவிசார் குறியீடு அளித்தது எங்களின் தொழிலுக்கு கிடைத்த பரிசாக எண்ணி மகிழ்ச்சியடைகிறோம். இதற்காக மத்திய, மாநில அரசிற்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

பெருமையாக இருக்கிறது

ரமேஷ் (கடம் தயாரிப்பாளர்) :-

மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்ட தொழிலுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இங்கு கடம் தயாரிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பல்வேறு கடம் இசைக்கலைஞர்கள் இங்கு நேரடியாக வந்து இங்கு தயாரிக்கப்படும் கடத்தை வாங்கிச் சென்று பல்வேறு கச்சேரிகளில் இசைத்து பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளனர். மேலும் மானாமதுரையில் தயாரிக்கப்படும் இந்த கடத்திற்கு ஏற்கனவே ஜனாதிபதி விருதும் கிடைத்துள்ளது. இந்நிலையில் தற்போது மானாமதுரை பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது பெருமையாக உள்ளது.

மகிழ்ச்சி

பாண்டி (மண்பாண்ட தொழிலாளர்) :- மானாமதுரை என்றாலே மண்பாண்டம் தான். இங்கு தயாரிக்கப்படும் அனைத்து மண்பாண்ட பொருட்களுமே சிறப்பு வாய்ந்தது தான். உலகில் பல்வேறு இடங்களில் மண்பாண்ட பொருட்கள் தயாரித்தாலும் கூட மானாமதுரையில் கிடைக்கும் மண் வகை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மண்பாண்ட பொருளுக்கு எப்பவுமே தனிமவுசு தான். நமது முன்னோர்கள் 100 ஆண்டுகாலத்திற்கும் மேலாக ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முதற்காரணம் அவர்கள் பயன்படுத்திய மண்பாண்ட பொருட்கள் தான். அத்தகைய சிறப்பு பெற்ற இந்த மண்பாண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது மிகவும் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story