நாமக்கட்டி, மட்டி வாழைப்பழம் உள்பட மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு


நாமக்கட்டி, மட்டி வாழைப்பழம் உள்பட மேலும் 3 பொருட்களுக்கு  புவிசார் குறியீடு
x
தினத்தந்தி 31 July 2023 7:13 AM GMT (Updated: 31 July 2023 8:15 AM GMT)

வீரமாங்குடி செடி புட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

சென்னை,

தஞ்சையில் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருநெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது என கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பட்டுதான் முதன்முதலில் புவிசார் குறியீட்டை பெற்றது. அதற்கான முயற்சியை முன்னெடுத்து, சாத்தியமாக்கி காட்டியவர் இந்த சஞ்சய் காந்தி.

புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்

உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை

"1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்பு சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வட்டார பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டு சட்டத்தின் நோக்கம்.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலபரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.

ஏற்கனவே மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடி சேலை, பழனி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், நெகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மட்டிப்பழம்

தமிழ்நாட்டில் விளையும் வாழை பழங்களில் பெரும்பாலானவை விளையும் மாவட்டம் குமரி என்றால் மிகையில்லை. குமரி மாவட்டத்தில் செவ்வாழை, நேந்திரம், பாளையங்கோட்டை, பேயன், சிங்கன், பூவன் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன.

மருத்துவ குணம் கொண்ட மட்டி ரக வாழைப்பழங்கள் நோய் எதிர்ப்புசக்தி கொண்டவை என்பதால், பச்சிளம் குழந்தைகள் முதல், நோயாளிகள் வரை அனைவரும் சாப்பிடுவது வழக்கம். இந்த வாழைப்பழத்தின் தோல் பொதுவாக மஞ்சள் நிறத்தில்தான் காணப்படும். மட்டி வாழை மரங்கள் 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது. வாழைத்தார்களில் வாழைக்காய்கள் நெருக்கமாக இருக்கும். இனிப்பு சுவையும் மணமும் கொண்டதாக மட்டி வாழைப்பழம் இருப்பதால் குமரி மாவட்டத்தில் மட்டிப்பழத்தை குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு முதல் முதலில் மட்டி வாழைபழத்தை நசுக்கி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.

நேருவுக்கு பிடித்த பழம்

மட்டி வாழையை நட்ட 11 முதல் 12 மாதங்களில் குலையை அறுவடை செய்யலாம். தார்கள் ஒவ்வொன்றும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் இருக்கும். ஒவ்வொரு தாரும் 12 கிலோ முதல் 15 கிலோவும், அதற்கு மேலும் எடை இருக்கும். ஒவ்வொரு பழமும் 40 கிராம் முதல் 60 கிராம் எடை இருக்கும். ரஸ்தாளி பழம் போலவே தோற்றமளிக்கும் மட்டிப்பழத்தின் முனைப்பகுதி சற்று நீண்டிருக்கும். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது.

மட்டிப்பழம் பற்றிய நிகழ்வு ஒன்றும் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது. அதாவது ஜவர்லால் நேரு பிரதமராக இருந்தபோது திருவனந்தபுரத்துக்கு வருகை தந்தார். விருந்தில் அவருக்கு குமரி மாவட்ட ஸ்பெஷல் மட்டிப்பழம் வழங்கப்பட்டது. சாப்பிட்டுப்பார்த்த அவர், "ஆஹா..ஆஹா. அருமை..இவ்வளவு ருசியான வாழைப்பழம் நான் சாப்பிட்டதே இல்லை!" என மகிழ்ந்ததாக கூறுவார்கள். அதன்பின்பு பலமுறை அவருக்கு குமரி மாவட்ட மட்டிப்பழம் திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்டது.


Next Story