மட்டி வாழைப்பழம், செடிபுட்டா சேலை, நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு


மட்டி வாழைப்பழம், செடிபுட்டா சேலை, நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு
x

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மட்டி வாழைப்பழம், நெல்லை மாவட்டத்தில் உள்ள செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாமக்கட்டி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தென்னை, அய்யம்பேட்டை அச்சுவெல்லத்துக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மட்டி வாழைப்பழம், நெல்லை மாவட்டத்தில் உள்ள செடிபுட்டா சேலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாமக்கட்டி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தென்னை, அய்யம்பேட்டை அச்சுவெல்லத்துக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு

தஞ்சையில் புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை சங்க வக்கீல் சஞ்சய் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் இதுவரை தஞ்சாவூர் வீணை, கலைத்தட்டு, ஓவியம் உள்ளிட்ட 55 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. தற்போது மட்டிவாழைப்பழம், செடிபுட்டா சேலை, நாமக்கட்டி ஆகிய 3 பொருட்களுக்கு நேற்று புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் தற்போது வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தென்னை, அய்யம்பேட்டை அச்சுவெல்லம் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிக புவிசார் குறியீடு பொருட்கள் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

செடிபுட்டா சேலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வீரவநல்லூரில் இந்த செடிபுட்டா சேலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இது கைத்தறி புடவையாகும். இந்த சேலையில் ஒரு செடியில் பூக்களும், இலைகளும் இருப்பது போல் புட்டா போட்டு நெய்யப்பட்டது. இதனால் நாளடைவில் செடிபுட்டா என பெயர் பெற்றது. பட்டு மற்றும் பருத்தி கலவை துணியில் இந்த சேலை தயார் செய்யப்பட்டு வருகிறது.இந்த சேலை 5.50 மீட்டர் நீளமும், 1.19 மீட்டர் அகலமும் கொண்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு புடவைகளில் பல புட்டா டிசைன்கள் நெய்யப்பட்டன. அதில் செடிபுட்டா சேலை தான் முதன்முதலில் அறிமுகமான புடவையாகும். இந்த சேலை நெசவு குஜராத்தில் இருந்து தென்தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடியேறிய சவுராஷ்டிரா சமூகத்தில் இருந்து உருவானது. இந்த சேலை வெப்பமண்டல காலநிலைக்கு ஏற்றது. கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் இதமான வெப்பமாகவும் இருக்கும்.

ஜடேரி நாமக்கட்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது ஜடேரி கிராமம். இந்த கிராமம் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் வளமான வரலாற்றை கொண்டுள்ளது. கடந்த 300 ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நாமக்கட்டிகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளை களிமண் துண்டுகளாக நாமக்கட்டியினை தயாரித்து வருகிறார்கள்.நாமக்கட்டிக்களை தயாரிப்பதற்கான வெள்ளை பூமி ஜடேரி கிராமத்திற்கு அருகில் உள்ள தென்பூண்டிப்பட்டில் கிடைக்கிறது. இந்த நாமக்கட்டிகள் இந்தியாவில் பூஜை செய்யும் பல வீடுகளில் காணப்பட்டாலும், இது மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.இந்த நாமக்கட்டிகள் விரல் வடிவில் இருக்கும். இந்த நாமக்கட்டி தயாரிக்க களிமண் பாறை பயன்படுத்தப்படுகிறது. 50 கிலோ எடையுள்ள நாமக்கட்டி மூட்டைகள் ரூ.1000-க்கு விற்பனை செய்யபப்படுகிறது. இந்த நாமக்கட்டி தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இதில் எந்தவித ரசாயனமும் கலக்கப்படவில்லை. இதனை திருமண் என்றும் அழைப்பர்.

கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்திருவிதாங்கூரின் அடிவார மலைகளுக்கு அருகில் மட்டிவாழைப்பழம் முக்கிய சாகுபடியாக விளங்கி வருகிறது. மட்டி வாழைப்பழத்தின் நுனி 2½ முதல் 3 செ.மீ. நீளம் மற்றும் முதலையின் வாய்போல காட்சி அளிக்கிறது. இது முதலை விரல் வாழைப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய வாழைப்பழம் ஆகும். அதிக மணம் உடையது. மஞ்சள் கலந்த பச்சை இலைகள் கொண்ட இந்த வாழை முதிர்ச்சி அடைய 15 மாதங்கள் ஆகும்.இந்த மட்டி வாழைப்பழம் அறுவடைக்காலம் செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆகும். இந்த வாழைக்குலைகள் நீளமாகவும், நேராகவும் வளரும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உடல் ஆரோக்கியமான இதயத்தையும், ரத்த அழுத்தத்தையும் பராமரிக்க உதவுகிறது. இந்த வாழைப்பழம் செரிமானத்துக்கு உதவுவதோடு, இரைப்பை, குடல் பிரச்சினைகளையும்சமாளிக்க உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story